/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் எப்போது கிடைக்கும்? பூத்து குலுங்கும் மலர்களிடையே வாடிய முகங்களுடன் 'தவம்'
/
தோட்டக்கலை ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் எப்போது கிடைக்கும்? பூத்து குலுங்கும் மலர்களிடையே வாடிய முகங்களுடன் 'தவம்'
தோட்டக்கலை ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் எப்போது கிடைக்கும்? பூத்து குலுங்கும் மலர்களிடையே வாடிய முகங்களுடன் 'தவம்'
தோட்டக்கலை ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் எப்போது கிடைக்கும்? பூத்து குலுங்கும் மலர்களிடையே வாடிய முகங்களுடன் 'தவம்'
ADDED : மே 13, 2025 10:21 PM

குன்னுார்: நீலகிரியில் பணிபுரியும் தோட்டக்கலை ஊழியர்கள், கால முறை ஊதியத்தை மாநில அரசிடம் கேட்டு, பல ஆண்டுகளாக போராடியும் தீர்வு கிடைக்கவில்லை.
நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் கீழ், 'ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா மற்றும், கல்லார் பழ பண்ணைகள், தும்மனட்டி, நஞ்சநாடு, தேவாலா தோட்டக்கலை பண்ணைகள், குன்னுார் பழவியல் நிலையம், தேயிலை பூங்கா,' ஆகியவை உள்ளன.
இங்கு, பணியாற்றும் ஊழியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுதி, பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு, கடந்த, 2007ல் நீலகிரியில், 533 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 1,083 பேர் நிரந்தர பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியமாக, 23 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சிறப்பு கால முறை ஊதியம்
அப்போது, மற்ற துறைகளில் காலமுறை ஊதியம் வழங்கப்பட்ட போது, தோட்டக்கலை பணியாளர்களுக்கு, 'பணிகொடை, பென்ஷன்' என, எந்த சலுகைகளும் வழங்காமல், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டனர். கடந்த, 2012ல் வேளாண், வனம் உள்ளிட்ட துறையில் உள்ளவர்களை, காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்த போதும், தோட்டக்கலை பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பலரும் பணி ஓய்வு பெற்ற பிறகு, கடந்த, 2020ல், நீலகிரியில் 225 பேர் உட்பட தமிழகத்தில், 660 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
சம்பள உயர்வும் இல்லை
கடந்த, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு வழங்கும் உத்தரவை கண்டுகொள்ளாத அதிகாரிகளால், பல ஆண்டுகளுக்கு மேலாக, நிரந்தர பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தோட்டக்கலை பூங்கா, பண்ணையில், 40 ஆண்டுகள் வரை உழைத்து, ஓய்வு பெறுபவர்களுக்கு, ஓய்வுக்கான பேப்பர் மட்டுமே கொடுத்து, பணிக்கொடை, ஓய்வூதியம், போன்றவை வழங்காமல், வழி அனுப்பி வைக்கும் அவலம் தொடர்கிறது. மேலும், நிரந்தர பண்ணை பணியாளர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஸ்பெஷல் பிராவிடண்ட் பண்ட் (எஸ்.பி.எப்., ) ஆகியவை பிடிக்கப்படுவதில்லை.
மனு போர் நடத்தியும் பயனில்லை
தோட்டக்கலை பணியாளர்கள் கூறுகையில், 'சேம நல நிதி, குடும்ப நல நிதி பிடித்தம் தொடர்பான ஆணையை செயல்படுத்த, 2022ல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. எனினும், 15க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், அந்தந்த பண்ணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே முன் பணம் வழங்கி, 4.75 லட்சம் ரூபாய் வழங்கவில்லை.
வேளாண் பல்கலை உட்பட அரசு துறைகளில் அடிப்படை சம்பளம், 15,700 ரூபாய் வழங்கப்பட்ட போதும், இங்கு முழு நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு, சலுகைகள் வழங்குவதில்லை.
இதற்கு தீர்வு காண தோட்டக்கலை, வேளாண் துறைக்கு மனுக்கள் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை,' என்றனர். தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''தோட்டக்கலை பணியாளர்களின் காலமுறை ஊதியம் கோரிக்கை ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.