/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாலையில் கேரள அரசு பஸ்சை மறித்த காட்டு யானை
/
அதிகாலையில் கேரள அரசு பஸ்சை மறித்த காட்டு யானை
ADDED : ஜன 17, 2025 11:29 PM
கூடலுார்; நீலகிரி மாவட்டத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், இரவு, 9:00 முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் வசதிக்காக, இரவில் இவ்வழியாக தமிழக, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள் தலா இரண்டு மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில், கூடலுார் வழியாக, பெங்களூரு --நிலம்பூர் இடையே இயக்கப்படும் கேரளா அரசு பஸ்சுக்கும் அனுமதி உள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு நிலம்பூர் செல்லும் கேரள பஸ் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கூடலுார் நோக்கி வந்துள்ளது.
அதிகாலை, 3:30 மணிக்கு, பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக வந்து கொண்டிருந்தபோது, காட்டு யானை சாலையில் எதிரே ஆக்ரோஷமாக பஸ்சை நோக்கி வந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் அச்சமடைந்தனர்.
டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு, சப்தமிடாமல் அமைதியாக இருக்கும்படி பயணிகளிடம் அறிவுறுத்தினார். பஸ் அருகே வந்த யானை, ஓட்டுனர் பகுதியில் சிறிது நேரம் நின்றது.
பின், பஸ்சை ஏதும் செய்யாமல் வனப்பகுதிக்கு சென்றது. தொடர்ந்து டிரைவர் பஸ்சை கூடலுார் நோக்கி இயக்கினார். பயணிகள் நிம்மதி அடைந்தனர்.