/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
/
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
ADDED : மார் 23, 2025 10:26 PM

கூடலுார் : கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கூடலுார் தொரப்பள்ளி பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, முதுமலை வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். எனினும், சில யானைகள், அகழியை சேதப்படுத்தியும், தொரப்பள்ளி வன சோதனை சாவடி வழியாகவும், நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், அவைகள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, முதுமலையிலிருந்து வந்த மக்னா யானை, தொரப்பள்ளி பகுதியில் முகாமிட்டது. இரவில், தொரப்பள்ளி ரேஷன் கடையை சேதப்படுத்தி, அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து போட்டது. அப்பகுதியினர் சப்தமிட்டு விரட்டினர்.
தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட யானை நேற்று காலை, 6:00 மணிக்கு மீண்டும் அதே ரேஷன் கடையை சேதப்படுத்தியது. ரேஷன் அரிசியை உண்ண துவங்கியது. மீண்டும் மக்கள் விரட்டியதை தொடர்ந்து, வன சோதனை சாவடியை கடந்து, முதுமலை வனப்பகுதிக்கு சென்றது. சேதமடைந்த ரேஷன் கடையை வனத்துறையினர், போலீசார் ஆய்வு செய்தனர்.
மக்கள் கூறுகையில், 'முதுமலையில் இருந்து தொடர்ச்சியாக இங்கு வரும் மக்னா யானை, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து கடைகள் வீடுகளை சேதப்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, காட்டு யானைகள் இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.