/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை ஓரத்தில் முகாமிடும் காட்டு யானைகள்.. அச்சத்தில் கிராம மக்கள்! திரும்பி சென்ற முதுமலை கும்கிகளால் சிக்கல்
/
சாலை ஓரத்தில் முகாமிடும் காட்டு யானைகள்.. அச்சத்தில் கிராம மக்கள்! திரும்பி சென்ற முதுமலை கும்கிகளால் சிக்கல்
சாலை ஓரத்தில் முகாமிடும் காட்டு யானைகள்.. அச்சத்தில் கிராம மக்கள்! திரும்பி சென்ற முதுமலை கும்கிகளால் சிக்கல்
சாலை ஓரத்தில் முகாமிடும் காட்டு யானைகள்.. அச்சத்தில் கிராம மக்கள்! திரும்பி சென்ற முதுமலை கும்கிகளால் சிக்கல்
ADDED : அக் 21, 2024 11:14 PM

பந்தலுார் : பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், குடியிருப்புகளை ஒட்டி முகாமிடும் யானைகளை, விரட்ட வந்த கும்கிகள் திரும்பி சென்ற நிலையில், மீண்டும் யானை கூட்டம் சாலை ஓரங்களில் முகாமிட்டு வருகின்றன.
கூடலுார் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சேரம்பாடி வனச்சரக எல்லையில் அதிக அளவில் கிராமங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப் பகுதிகள் அமைந்துள்ளன.
அதில், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானை கூட்டம், தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.
விவசாய தோட்டம் சேதம்
இவ்வாறு முகாமிடும் யானைகள் மாலை, 6:00 மணிக்குமேல், குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் வந்து உணவுக்காக விவசாய தோட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அப்போது, எதிரே வரும் மனிதர்களை தாக்கி கொன்று வருவதும் அதிகரித்து வருகிறது.
இதனால், குடியிருப்புகளை ஒட்டி முகாமிடும் யானைகளில், மனிதர்கள் தாக்கும் யானைகளை கண்டறிந்து, அவற்றை அடர்ந்து வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி யானைகள் வசீம் மற்றும் விஜய் ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டன.
காட்டு யானைகள் ஆதிக்கம்
இவைகள், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக, சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே காட்டு யானைகளை துரத்த கும்கிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 30--க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை இரண்டு கும்கி யானைகளால், விரட்ட முடியாத நிலையில் அவை திரும்பி அழைத்து செல்லப்பட்டன. இந்நிலையில், சேரம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட, ஏலியாஸ் கடை மற்றும் சேரம்பாடி டான்டீ படச்சேரி பகுதிகளில் யானைகள், தொடர்ச்சியாக முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
யானைகள் விரட்டும் வன ஊழியர்கள்
அத்துடன் மனிதர்களை பார்த்தால் தாக்கும் குணம் கொண்ட புல்லட் யானை; சத்துணவு கூடங்கள், ரேஷன் கடைகள் மற்றும் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தி வரும் கட்டைகொம்பன் ஆகிய யானைகள் அய்யன்கொல்லி பகுதியில் முகாமிட்டு பொதுமக்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
தொல்லை தரும் காட்டு யானைகளை விரட்ட வந்த, கும்கி யானைகள் திரும்பி அழைத்து செல்லப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கம்போல் வனத்துறை பணியாளர்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்; குடியிருப்புகள் மற்றும் ரேசன் கடைகளை சேதப்படுத்தி வரும், யானைகளை கண்டறிந்து அவற்றை விரட்ட போதியளவு, கும்கி யானைகளை வரவழைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.