/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல ஆண்களிடம் மோசடி கில்லாடி பெண் கைது
/
பல ஆண்களிடம் மோசடி கில்லாடி பெண் கைது
ADDED : டிச 11, 2024 08:12 AM

கோவை: பொள்ளாச்சியை சேர்ந்த 32 வயதான விவசாயி ஒருவர், தன் திருமணத்திற்காக, 'மேட்ரிமோனி' எனும் திருமண செயலி ஒன்றில், விவரங்களை பதிவு செய்திருந்தார். 2023 ஆகஸ்ட் மாதம் நாமக்கலை சேர்ந்த பிரியா, 32, என்பவர் அந்த வகையில் பழக்கமானார். அந்த பெண்ணிடம் போனில் பேசி, அவரின் குடும்பம் பற்றி விசாரித்தார்.
பின், இருவரும், அடிக்கடி போனில் பேசினர். இந்நிலையில் தன் அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி, மருத்துவ செலவுக்கு பணம் கேட்டார் அந்த பெண்.
இவ்வாறு பல முறை, 7.12 லட்சம் ரூபாய் வரை, அந்த விவசாயி கொடுத்துள்ளார். திருமணம் குறித்து பிரியாவிடம் கேட்டபோது, மறுத்து வந்தார்; நாளாடைவில் பேசுவதை நிறுத்தி விட்டார். அவர் கொடுத்த நாமக்கல் முகவரிக்கு சென்று பார்த்தபோது, அது போலியானது என தெரிந்தது. இதையடுத்து, அந்த விவசாயி போலீசில் புகார் அளித்தார்.
கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பிரியாவின் வங்கி கணக்கை சோதனை செய்தபோது, அவர் சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்தவர் என தெரிந்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், பிரியாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானதும், அவரின் முதல் கணவர் இறந்து விட்டதும், இரண்டாம் கணவரிடம் இருந்து பிரிந்து, தற்போது சுதாகர் என்பவருடன் வாழ்ந்து வருவதும் தெரிந்தது.
இவர், அந்த மேட்ரிமோனி ஆப்பில் பதிவு செய்து, அதில் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை குறி வைத்து மோசடி செய்வதாக, போலீசில் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நபரிடம் மட்டுமின்றி, பலரிடமும் பல லட்சம் ரூபாயை அவர் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது.

