/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நவராத்திரி கொலு வைத்து நாள்தோறும் வழிபாடு
/
நவராத்திரி கொலு வைத்து நாள்தோறும் வழிபாடு
ADDED : செப் 25, 2025 11:31 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் செயல்படும் ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில், ஆண்டுதோறும் நவராத்திரி பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது பள்ளி வளாகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, தினசரி காலையில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பூஜைக்கான பொருட்கள் மற்றும் பழங்கள், பொங்கல், பாயாசம் உள்ளிட்ட பொருட்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வருகின்றனர்.
விரதமிருந்து இவற்றை எடுத்து வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
பூஜைகளை பள்ளி ஆசிரியர்கள் செய்வதுடன், நவராத்திரி பாடல் மற்றும் இதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர் மத்தியில் விளக்குகின்றனர்.
பள்ளி தாளாளர் மனோஜ்குமார் கூறுகையில், ''மாறிவரும் கலாசாரத்தில் சாமி கும்பிடுவது மற்றும் பூஜை செய்வது குறைந்து வருகிறது.
இதனை மாற்றுவதற்காக, ஒவ்வொரு பூஜைகளும் எதற்காக செய்கிறோம் மற்றும் வழிபடும் முறைகள், அதன் முக்கியத்துவம் குறித்து மாணவ பருவத்திலேயே தெரிவித்து அவர்கள் மனதில் பதிய வைத்தால், பக்தியுடன், தேசப்பற்றும் பெருகும். தேவையற்ற பழக்கங்களில் மாணவர்கள் எண்ணம் செல்லாது,'' என்றார். நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் அன்பரசி தனராஜ், துணை முதல்வர் ரேணுகா தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
*குன்னுாரில் உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
குன்னுார் கிரேஸ்ஹில் பகுதியில் உள்ள சேகர் என்பவரின் வீட்டில் கொலு வைத்து, சுமங்கலி பூஜைகள் நடத்தி மகளிருக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல, கூடலுார் விநாயகர் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
மேலும், ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில், பாம்பே கேசில் பகுதியில் சத்திய நாராயணன் என்பவர் வீட்டில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.