ADDED : செப் 23, 2026 06:13 PM

பந்தலுார்: கேரளா வயநாடு பகுதியில், யானை தந்தங்கள் வைத்திருந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, கேரளா வயநாடு பகுதியில் சிலர் யானை தந்தங்களை விற்பனை செய்ய உள்ளதாக, வனத்துறை உளவு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, கல்பட்டா மற்றும் குறிச்சியாடு, குப்பாடி வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினர், இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, செதிலேயம் வனத்தை ஒட்டிய ஒரு ஓய்வு விடுதியில், யானை தந்தம் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு சென்ற வனத்துறையினர் யானை தந்தங்களை வைத்திருந்த ஷமின் பிரான்சீஸ்,32, அபிலாஷ் ,44, மற்றும் யானை தந்தங்களை வழங்கிய குறிச்சியாடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்,34, பாலன்,55, பணயம் பகுதியை சேர்ந்த ஜித்து, 27, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தங்கள் மற்றும் உடைந்த சிறிய துண்டு தந்தம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த வேறு யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்தும், கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
