/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
குடும்பத்துடன் ம.பி., முதியவர்...
/
குடும்பத்துடன் ம.பி., முதியவர்...
ADDED : ஜன 22, 2025 01:55 AM

பெரம்பலுார்:மத்திய பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்லால், 59, என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலுார் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்த நிலையில் சுற்றித்திரிந்தார். அவரை, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அங்குள்ள வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
இவருக்கு, 10 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த பயிற்சிகளும், மருத்துவ சேவைகளும் அளிக்கப்பட்டதால், பூரண குணமடைந்தார். அதன்பின், அவர் தன் பூர்வீகம், குடும்ப உறுப்பினர்கள், வீட்டு முகவரி போன்ற விபரங்களை தெரிவித்தார். இதனால், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின், பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், ராம்லாலை, அவருடைய மகன் சஞ்சய்குமாரிடம் ஒப்படைத்தார். தன் தந்தையை, 10 ஆண்டுகளாக பாதுகாப்பாகவும், மருத்துவ சேவை உள்ளிட்ட உதவிகளை வழங்கி, பராமரித்து வந்த தமிழக அரசுக்கும், கலெக்டருக்கும், வேலா கருணை இல்ல நிர்வாகிகளுக்கும், சஞ்சய்குமார் தன் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார்.