/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் சிறையில் அடைப்பு
/
மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியர் சிறையில் அடைப்பு
ADDED : நவ 29, 2024 03:03 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58. இவர், அரசு பள்ளி ஒன்றில், தொழிற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர், பள்ளியில் பயிலும் மாணவியர் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவத்திடம் மாணவியர் புகார் தெரிவித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் இந்த தகவலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாளுக்கு தெரிவித்தார். அதையடுத்து, அவர் பள்ளிக்கு வந்து மாணவியரிடம் விசாரித்தார்.
அப்போது 7, 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவியர் ஒன்பது பேரிடம், ஆசிரியர் ராஜேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் கொடுத்த புகாரில், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, பள்ளிக்கு சென்று விசாரித்தார். விசாரணையில், ஆசிரியர் ராஜேந்திரன் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரிந்தது.
அதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். ஆசிரியர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் நேற்று உத்தரவிட்டார்.
இன்னொரு ஆசிரியர் கைது
திருவள்ளூர் கல்வி மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சேகர், 57, என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், இப்பள்ளியில் பயிலும் இரு மாணவியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆசிரியர் சேகரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில், கடந்த 10 நாட்களில் சேகர் உட்பட மூன்று ஆசிரியர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.