/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பள்ளி வகுப்பறை கூரை இடிந்ததால் மாணவர் பீதி
/
பள்ளி வகுப்பறை கூரை இடிந்ததால் மாணவர் பீதி
ADDED : ஆக 13, 2024 11:45 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 167 மாணவர்கள் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இப்பள்ளி கட்டடத்தில், அவ்வப்போது மேற்கூரை காரை பெயர்ந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், 'பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்' என, அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளியை திறக்க வரும்போது, ஏழாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறையின் கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
பள்ளி அறையின் கூரை இடிந்து விழுந்த நேரத்தில், மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பீதியடைந்த மாணவர்கள், சத்தம் கேட்டு, அவசரமாக வெளியே வந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.