/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
/
தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
தி.மு.க., 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
ADDED : அக் 04, 2025 02:45 AM

புதுக்கோட்டை,:புதுக்கோட்டை அருகே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டு மனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பையா.
இவர், 1967 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர். 1969ல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற போது, ஆலங்குடி சுப்பையா, அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சென்னையில் அண்ணாநகரை உருவாக்கியது, துவரங்குறிச்சியில் ஹிந்து - முஸ்லிம் கலவரத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்தது, திருவாரூர் கோவில் தேரை மீண்டும் ஓடச் செய்தது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்தது உள்ளிட்ட சாதனைகளை செய்தவர்.
இருமுறை ஆலங்குடி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், 1976ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.
அவரது உடல், சொந்த ஊரான, கரும்பிரான்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் புறம் போக்கு இடத்தில் புதைக்கப்பட்டு, சமாதி கட்டப்பட்டது.
காலப்போக்கில் இந்த சமாதி சிதலமடைந்தது. இதை சீரமைக்க சில நாட்களுக்கு முன், சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில், அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., ஐஸ்வர்யா, ஆலங்குடி தாசில்தார் வில்லியம் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.,வினர் மற்றும் ஆலங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.