/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆறு மாத குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூர தாய் கைது
/
ஆறு மாத குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூர தாய் கைது
ஆறு மாத குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூர தாய் கைது
ஆறு மாத குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூர தாய் கைது
ADDED : ஏப் 09, 2025 03:04 AM
புதுக்கோட்டை:ஆறு மாத ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்து நாடகமாடிய தாயை, போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கண்ணங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன், 32. இவரது மனைவி லாவண்யா, 21. இவர்களுக்கு, ஆதிரன் என்ற ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது.
மணிகண்டன், நாக்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு நடந்தது.
இந்நிலையில், குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்படவே, லாவண்யா, புலியூரில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். கடந்த, 5ம் தேதி இரவு, மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, தன் தாலி செயினை அறுத்ததுடன், குழந்தையையும் துாக்கிச் சென்றதாக லாவண்யா கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த தண்ணீர் பேரலுக்குள் குழந்தை இறந்து கிடந்தது.
புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக்குப்தா விசாரித்தார்.
கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து, லாவண்யா, அவரது தாய், அத்தை, கணவர் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
இதில், குழந்தையை லாவண்யா கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கணவர் தன் மீது அன்பு செலுத்தாமல், குழந்தை மீது மட்டுமே பாசத்துடன் இருந்ததால், ஆத்திரத்தில் பேரல் தண்ணீருக்குள் குழந்தையை மூழ்கடித்து, கொன்றுவிட்டு, நாடகமாடியதாக லாவண்யா வாக்குமூலம் அளித்தார்.
லாவண்யாவை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.