/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கல்லை கட்டி கடலில் வீசி மீனவரை கொன்ற இருவர் கைது
/
கல்லை கட்டி கடலில் வீசி மீனவரை கொன்ற இருவர் கைது
ADDED : பிப் 12, 2025 01:18 AM
புதுக்கோட்டை:மீனவர் உடலில் கல்லைக்கட்டி கடலில் வீசி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், டிச., 30 அதிகாலை கடலில் மீன்பிடிக்க வலை வீசியபோது, 5 அடி நீள கல் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று சிக்கியது.
மணமேல்குடி போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இறந்தவர், வடக்கு புதுக்குடியைச் சேர்ந்த மாதவன், 38, என, தெரிந்தது.
இவர், அடிக்கடி நண்பர்களுடன் வெளியூர் செல்வது, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால், அவரது மனைவி காளீஸ்வரி கணவரை தேடாமல் இருந்துள்ளார். விசாரணையில், முன்விரோதம் காரணமாக, மதுபோதையில் இருந்த மாதவனை, அதே ஊரைச் சேர்ந்த காளீஸ்வரன், 25, மற்றும் 17 வயது சிறுவன், அவரது உடலில் கல்லைக்கட்டி கடலில் வீசிக் கொன்றது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

