/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சார வசதியில்லாமல் வகுப்புகள் துவக்கம்
/
மின்சார வசதியில்லாமல் வகுப்புகள் துவக்கம்
ADDED : பிப் 19, 2025 04:59 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ.12.46 கோடியில் அமைத்த புதிய அரசு கல்லுாரியில் மின்சார இணைப்பு, சுற்றுச் சுவர் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 2021 முதல் துவக்கப்பட்டு தனியாக கட்டடம் இல்லாததால் ராமேஸ்வரம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள புயல் காப்பகத்தில் செயல்பட்டது. இங்கு இளங்கலை பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பில் 364 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் எதிரே ரூ.12.46 கோடியில் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பிப்.,14ல் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் மாணவர்களை புதிய கட்டடத்தில் படிக்கச் செல்ல கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் புதிய கல்லுாரி கட்டடத்தில் மின்சார இணைப்பு இல்லை. மேலும் சுற்றுச் சுவர் இல்லாததால் கால்நடைகள் வளாகத்தில் திரிகின்றன. இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக மாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் மிகுந்த ஆர்வமுடன் புதிய கல்லுாரிக்கு சென்ற மாணவர்களுக்கு மின்விசிறி இயங்காமல் வெப்ப சலனத்தில் வியர்வை சிந்தி படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
மேலும் கணினிகளை இயக்க முடியாமல் முடங்கி கிடப்பதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அடிப்படை வசதிகளின்றி அவசர கதியில் புதிய கட்டடத்தை திறந்ததால் தற்போது மாணவர்களின் பாதுகாப்பு, கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

