/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்டத்தில் பத்து நாளில் 124 பேர் அனுமதி; கொசுத்தொல்லையால் டெங்கு அபாயம்
/
மாவட்டத்தில் பத்து நாளில் 124 பேர் அனுமதி; கொசுத்தொல்லையால் டெங்கு அபாயம்
மாவட்டத்தில் பத்து நாளில் 124 பேர் அனுமதி; கொசுத்தொல்லையால் டெங்கு அபாயம்
மாவட்டத்தில் பத்து நாளில் 124 பேர் அனுமதி; கொசுத்தொல்லையால் டெங்கு அபாயம்
ADDED : அக் 26, 2025 05:09 AM

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சராசரியாக 48 செ.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் ரோடுகளில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கியுள்ளதால் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இது குறித்து கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவா கூறியதாவது: ராமநாதபுரத்தில் கனமழை பெய்த நிலையில் கோட்டைமேடு பகுதி முழுவதும் தண்ணீரில் மிதந்தது.
ஆனால் நகராட்சி அலுவலர்கள் முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை மட்டும் அகற்றிவிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீரை அகற்றவில்லை. நகராட்சியில் புகார் அளித்தால் ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி புகாரை அலட்சியம் செய்கின்றனர்.
மழைக்காலங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்து இது போன்று தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும். இல்லையெனில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
காந்தாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த அசைன் பானு கூறியதாவது: வீட்டு வாசலில் உள்ள கழிவுநீர் வடிகாலை கடந்த இரு மாதங்களாக முறையாக பராமரிக்காததால் ரோட்டில் நிரம்பி ஓடுகிறது.
தற்போது மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வீட்டு வாசலில் குளம் போல் தேங்கியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் போது வீட்டிற்குள் கழிவுநீர் வந்து விட்டது. துர்நாற்றத்ததால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை.
குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. நகராட்சியிடம் கழிவுநீரை அகற்றுமாறு கூறினால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கொசு பரவலும் அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.
காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த பத்து நாட்களில் 124 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றார்.

