/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பை தொட்டியான கால்வாய்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
குப்பை தொட்டியான கால்வாய்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை தொட்டியான கால்வாய்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை தொட்டியான கால்வாய்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூலை 05, 2024 10:46 PM

பரமக்குடி : பரமக்குடி மற்றும் அருகில் உள்ள கால்வாய்களில் மக்கள் குப்பை கொட்டும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வானம் பார்த்த பூமியான இங்கு பருவ மழையை நம்பி விவசாயம் செய்யும் சூழலில் வைகை பாசனம் பெருமளவில் கை கொடுக்கிறது. தேனி மாவட்டம் வருஷநாட்டில் உள்ள வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை காலங்களில் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.
தொடர்ந்து பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கவும் எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் வழியாக பல்வேறு கண்மாய்கள் தண்ணீர் பெற்று பயனடைகிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.
மேலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடைகிறது. இச்சூழலில் பிரதான நீர் வழிப்போக்காக உள்ள கால்வாய் ஓரங்களில் குடியிருக்கும் மக்கள் ஆங்காங்கே தங்களது வீடுகளில் உள்ள குப்பையை நேரம் காலம் இன்றி கொட்டி வருகின்றனர்.
இவற்றால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுக்கும் நேரங்களில் கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களை பிளாஸ்டிக் அடைவதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. ஆகவே கால்வாய்களை துார்வாரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குப்பை கொட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.