ADDED : மே 07, 2024 11:28 PM

ராமேஸ்வரம், :ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் குளித்து விளையாடிய வாலிபர் கடலில் மூழ்கி காணாமல் போனார். அவரை உறவினர்கள் தேடுகின்றனர்.
பாம்பன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜாகிர்உசேன் மகன் முஜாஹித் 18. நண்பர்கள் சிலருடன் நேற்று மதியம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள படகுகள் நிறுத்தும் பாலத்தில் இருந்து குதித்து விளையாடி உள்ளனர்.அப்போது கடலில் குதித்த முஜாஹித் ,ராட்சத அலையில் சிக்கியதால் மீண்டும் மேலே எழ முடியாமல் மூழ்கினார். இதனால் பதட்டமடைந்த நண்பர்கள் வெகு நேரம் தேடியும் அவரை காணவில்லை.
இதையடுத்து மரைன் போலீசார் உதவியுடன் உறவினர்கள் படகு மூலம் மாலை 6:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை தேடும் பணி துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.
தற்போது பாம்பன் கடலில் சூறாவளிக் காற்றுடன் ராட்சத அலை எழுவதால் முஜாஹித் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

