/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி சர்ச் பார்வையிட ரூ.56 லட்சத்தில் மேடை
/
தனுஷ்கோடி சர்ச் பார்வையிட ரூ.56 லட்சத்தில் மேடை
ADDED : ஏப் 26, 2024 01:58 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடி - இலங்கைக்கு 1914ல் இரு கப்பல் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் துவக்கினர்.
இதனால் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணியர் குவிந்ததால் முக்கிய வணிக நகரமாக உருவானது. இங்கு விநாயகர் கோவில், மாதா சர்ச், ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம் உள்ளிட்ட பல கட்டடங்கள் இருந்த நிலையில் 1964ல் புயலில் அனைத்து கட்டடங்களும் இடிந்து சின்னாபின்னமாயின.
அதே நேரம் விநாயகர் கோவில், சர்ச் முழுவதும் சேதம் அடையாமல் வரலாற்று சின்னமாக இன்றும் காட்சியளிக்கின்றன. இதை புதுப்பிக்க மாநில அரசு முன்வராத நிலையில், சில ஆண்டுகளாக சர்ச் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து, முன்புற சுவர் மட்டுமே தற்போது உள்ளன.
இந்த இடத்தை, 2023ல் தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்து, 'சர்ச் பழமை மாறாமல் விரைவில் புதுப்பிக்கப்படும்' என்றார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், சுற்றுலாப் பயணியர் இந்த சர்ச்சின் சிதிலங்களை கண்டு ரசிக்க, 56.13 லட்சம் ரூபாயில் மரக்கட்டைகளால் மேடை அமைக்கப்படுகிறது.
வரும் குளிர் சீசனில் மழையுடன் சூறாவளிக் காற்று வீசினால் சர்ச் முழுதும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அப்போது, நடைமேடையும் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.

