/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம்
/
ஆபத்தான கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம்
ADDED : மார் 01, 2025 06:21 AM

கமுதி: கமுதியில் மின்வாரிய அலுவலக கட்டடம் சேதமடைந்து சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி ஆபத்தான நிலையில் உள்ளது.
கமுதி எட்டுக்கண் பாலம் அருகே மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கமுதி தாலுகா பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மின்வாரிய அலுவலகம் வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளாக எட்டுக்கண் பாலம் அருகே ரோடு அகலப்படுத்துதல், பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரோடு உயர்ந்து மின்வாரிய அலுவலகம் பள்ளமான இடத்தில் உள்ளது. இதுவரை முறையான பராமரிப்பு பணி செய்யப்படாததால் கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
மின் சாதன பொருட்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி இல்லை. மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. சீமைக்கருவேலம் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
மின்சாதன பொருட்கள், முக்கிய ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. பணியாளர்கள், மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பராமரிப்பு பணி செய்து தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.