/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் பிளாஸ்டிக் அதிகரிப்பு
ADDED : ஜூலை 01, 2024 04:15 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதுடன் அரசின் மஞ்சப்பை திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் இருப்பதால் டவுன் பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு தினமும் மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான பலசரக்கு, பெட்டிக்கடைகள் பழக்கடைகள், ஹோட்டல்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்கில் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். வர்த்தகர்களும் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் பைகள் கொண்டு வருமாறு பலமுறை வலியுறுத்தியும் கொண்டு வருவதில்லை.
வியாபாரிகளும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகளில் பொருட்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும் அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.