/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணி துார்வாரும் சாக்கில் கனிம வள கொள்ளை: தடுத்து நிறுத்துங்க ஆபிசர் போராட்டம் நடத்த பா.ஜ., ஆயத்தம்
/
ஊருணி துார்வாரும் சாக்கில் கனிம வள கொள்ளை: தடுத்து நிறுத்துங்க ஆபிசர் போராட்டம் நடத்த பா.ஜ., ஆயத்தம்
ஊருணி துார்வாரும் சாக்கில் கனிம வள கொள்ளை: தடுத்து நிறுத்துங்க ஆபிசர் போராட்டம் நடத்த பா.ஜ., ஆயத்தம்
ஊருணி துார்வாரும் சாக்கில் கனிம வள கொள்ளை: தடுத்து நிறுத்துங்க ஆபிசர் போராட்டம் நடத்த பா.ஜ., ஆயத்தம்
ADDED : செப் 12, 2024 04:35 AM

திருப்புல்லாணி: ஜூலை 20 முதல் தற்போது வரை ஊருணிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்காகவும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காகவும் கனிம வளம் மற்றும் வருவாய்த் துறை அனுமதி அளிக்கிறது.
பெரும்பாலும் மண்பாண்ட தொழில் நலிவடைந்து போய் உள்ள நிலையில் அவர்கள் பெயரைச் சொல்லியும் வயல்வெளியில் மண் மேவுவதற்கு பதில் தனி நபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் இடங்களில் தான் மண் கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.
இந்நிலையில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருவாரியான ஊராட்சிகளில் உள்ள பிரதான ஊருணிகளில் சவடு மண் மற்றும் வண்டல் மண் இயந்திரங்களின் உதவியுடன் எடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது.
கிராம மக்கள்குளிப்பதற்காகவும், கால்நடைகள் கோடை வறட்சி தாக்கத்தால் குடிப்பதற்காகவும் பயன்பட்டு வந்த ஊருணிகள் தற்போது உருவாகியுள்ள மெகா பள்ளங்களால் பெரும் விபத்தை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்புல்லாணி பா.ஜ., ஒன்றிய தலைவர் சாமிநாதன் கூறியதாவது:
ஆளுங்கட்சி சார்பில் ஒரு சாரார் மட்டுமே அதிகளவில் பயன் பெறும் நோக்கில் அனுமதிக்கப்படும் வண்டல் மண் மற்றும் சவடு மண் கட்டட பயன்பாட்டிற்கான சலங்கை மண் உள்ளிட்டவைகளை பெருவாரியாக அள்ளப்படும் ஊராட்சியில் டிராக்டர்கள் மூலமாக விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது.
அரசு மற்றும் வருவாய் துறையினர் ஒதுக்கியுள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக அள்ளப்படும் மணலால் மெகா பள்ளங்கள் உருவாகின்றன. வரக்கூடிய பருவ மழை காலங்களில் அப்பகுதி முழுவதும் நீரால் நிரம்பும் பட்சத்தில் சிறுவர்கள்,பொதுமக்கள் தவறி விழுந்தால் உயிரிழக்கும் வாய்ப்பு நிகழும்.
பிரதான சாலையின் கரையோரங்களில் இது போன்று விபத்துகளுக்கும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான ஊருணிகளில் கரைகளை பலப்படுத்தாமல் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படும் போக்கு தொடர்கிறது.
இது தொடர்பாக பா.ஜ., சார்பில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்த உள்ளோம். எனவே தொடர்ந்து அழிக்கப்படும் கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் பெருவாரியான ஊருணிகள் மெகா பள்ளங்களாகவும் ஆபத்து விளைவிக்கும் இடமாகவும் உருமாறும் என்றார்.

