/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா
/
மாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா
ADDED : ஜூன் 27, 2024 04:46 AM

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி இந்திரா நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் 20ம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா ஜூன் 15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
நாள்தோறும் மூலவர் சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அக்னி சட்டி, வேல் காவடி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் நிறைவேற்றினர்.
நேற்று காலையில் மூலவர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர்.
மாலையில் அம்மன் கரகம் முன்னே செல்ல நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றில் பாரியை கங்கை சேர்த்தனர்.
ஏற்பாடுகளை திருப்புல்லாணி இந்திரா நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பெரியபட்டினம்:பெரியபட்டினம் அருகே கொல்லந்தோப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 85ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.
முன்னதாக ஜூன் 15ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
நேற்று காலை சர்வ சந்தனக் காப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் கும்மி கொட்டப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு ஊருணி கரையில் கங்கை சேர்க்கப்பட்டது.
ஏற்பாடுகளை கொல்லந்தோப்பு கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.