ADDED : ஜூலை 09, 2026 10:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலக் குழுத் தலைவர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
செவிலியர் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான நிரந்தர செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே உள்ள செவிலியர்களை வேறு இடத்திற்கு பணி மாற்றுவதை கைவிட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட சுகாதார மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்க வேண்டும்.
இதே போல் ஒரு சுகாதார வட்டத்திற்கு ஒரு திறன் மேம்பாட்டு செவிலியரை நியமிக்க வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தது 6 செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்றார். மாவட்ட தலைவர் மரியம் பீவி, செயலாளர் பிரதீபா, பொருளாளர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
