/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி; தினமலர் செய்தி எதிரொலி
/
மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி; தினமலர் செய்தி எதிரொலி
மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி; தினமலர் செய்தி எதிரொலி
மன்னார் வளைகுடா தீவுகளில் ரோந்துப்பணி; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : மார் 08, 2025 04:06 AM
கீழக்கரை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கீழக்கரை மன்னார் வளைகுடா தீவுகளில் அனைத்து துறை குழுவினர் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் மற்றும் தீவுப் பகுதிகளில் ரோந்து பணி அவசியம் என்பது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டி செய்திகள் வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுங்கத்துறை, மெரைன் போலீசார், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ், வருவாய்த்துறையினர், மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர்கள், மீன்வளத் துறையினர், கடற்படையினர் உள்ளிட்ட துறைகளில் இருந்து இரு அலுவலர்கள் வீதம் 12 துறை சார்ந்த அலுவலர்கள் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மன்னார் வளைகுடா கடலில் கரையில் இருந்து 10 நாட்டிக்கல் மற்றும் 15நாட்டிக்கல் தொலைவில்உள்ள அப்பாத்தீவு, வாளைத்தீவு, வாலிமுனை தீவு, தலையாரி தீவு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வெளி நபர்களின் நடமாட்டம், தீவுகளில் அந்நியர்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் ஏதேனும் உள்ளதா, மரங்கள் ஏதேனும் வெட்டப்பட்டுஉள்ளதா, சதி செயல்களுக்கான இடம் ஏதேனும் உள்ளதா, மர்ம நபர்களின் அடைக்கலம் உள்ளதா என்பது குறித்து ஒவ்வொரு தீவிலும் துறை சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு கரை திரும்பினர்.
இதே போன்று அடிக்கடி கூட்டு ரோந்து மேற்கொண்டால் இலங்கைக்கு கடத்தல் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.