ADDED : பிப் 27, 2025 12:38 AM

முதுகுளத்துார் ; முதுகுளத்துாரில் இருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்லும் ரோடு கரடு முரடாக இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஏனாதி, கூவர்கூட்டம், கிடாத்திருக்கை, கொண்டுலாவி கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
மற்ற நேரங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைக்கு செல்வதற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சரக்கு வாகனம், டூவீலரில் முதுகுளத்துார் செல்கின்றனர். ஏனாதியில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் ரோடு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
தற்போது வரை பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியே நடந்து செல்லக் கூட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக இருப்பதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு வாகனத்திற்கு வழி விட்டு செல்ல முடியாமல் அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.