/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு
/
தனுஷ்கோடியில் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு
ADDED : மே 09, 2024 02:51 AM

ராமேஸ்வரம்:-தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தனுஷ்கோடி- அரிச்சல்முனை வரை 53 ஆண்டுக்கு பின் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017 ஜூலை 27ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் அரிச்சல்முனைக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனை பயன்படுத்தி இப்பகுதி மீனவர்கள் 30 பேர் பழங்களை நறுக்கி விற்று வருவாய் ஈட்டினர். காலப்போக்கில் அரிச்சல்முனையில் ரோட்டின் இருபுறமும் 150 கடைகள் அமைத்து ஆக்கிரமித்து பழங்கள், கடல்சார் அழகு பொருள்கள் விற்று சந்தை கடையாக மாற்றினர். கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தனுஷ்கோடி கடலில் சுற்றுச்சூழல் மாசுபட்டு அரியவகை மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துடன் நடந்தும், வாகனங்களை திருப்பிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து டிச.17ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி டிச.22ல் ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.
ஆனால் தற்போது ஆளும் கட்சியினர் ஆசியுடன் மீண்டும் ரோட்டின் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் விரித்து ஆக்கிரமித்துள்ளனர். தற்போது 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுவதுடன் வாகனங்கள் நிறுத்த இடமின்றி அவதிப்படுகின்றனர்.