/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவிழா காலங்களில் மக்களின் கவனம் ஈர்க்கும் சீனி மிட்டாய், ஏணி மிட்டாய்
/
திருவிழா காலங்களில் மக்களின் கவனம் ஈர்க்கும் சீனி மிட்டாய், ஏணி மிட்டாய்
திருவிழா காலங்களில் மக்களின் கவனம் ஈர்க்கும் சீனி மிட்டாய், ஏணி மிட்டாய்
திருவிழா காலங்களில் மக்களின் கவனம் ஈர்க்கும் சீனி மிட்டாய், ஏணி மிட்டாய்
ADDED : ஏப் 10, 2024 05:57 AM

சாயல்குடி : திருவிழாக் காலங்களில் எத்தனை இனிப்புகள் எண்ணெய் பதார்த்தங்கள் இருந்தாலும் சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் சீனி மிட்டாய் மற்றும் ஏணி மிட்டாய்க்கு மவுசு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா, தரைக்குடி கோயில் விழா மற்றும் சாயல்குடி, கடலாடி சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் முளைக்கொட்டு உற்ஸவம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட கோயில் விழாக்களில் சீனி மிட்டாய் அனைவரின் கவனம் ஈர்த்து வருகிறது.
செயற்கையான வண்ணம் மிகுந்த கெமிக்கல்ஸ் நிறைந்த மிட்டாய்களுக்கு மத்தியில் இயற்கை சார்ந்த உணவு பதார்த்தங்களுக்கு எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.
சாயல்குடியை சேர்ந்த சீனி மிட்டாய் மற்றும் ஏணி மிட்டாய் தயாரிக்கும் சுரேஷ்குமார் கூறியதாவது: பச்சரிசி, உளுந்து இவைகளை ஒன்றாக நன்கு பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய எண்ணெய் சட்டியில் ஒரு செம்பின் அடிப்பகுதியில் துவாரமிட்டு அவற்றில் இந்த மாவு கலவையை சுற்றி சுற்றி ஏணிப்படி போன்று வார்க்க வேண்டும்.
அதன் பிறகு இளஞ்சூட்டில் தயாராக வைத்திருக்கும் சீனிப்பாகில் ஊற வைக்க வேண்டும். அப்போது வெள்ளை நிறத்தில் மிட்டாய் கிடைக்கும்.
இதே போன்று மண்டை வெல்லத்தால் செய்யப்பட்ட பாகுவில் ஊற வைத்து எடுத்தால் பழுப்பு நிறத்தில் சீனி மிட்டாய் கிடைக்கும். தற்போது கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை வரிசையாக கோபுரம் போல அடுக்கி வைத்திருந்தால் பார்வையாளர்களை எளிதில் கவரும்.
அதை வாங்கி சாப்பிடும் போது சுவையாகவும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது. அப்போது பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இந்த பலகாரத்தின் மதிப்பு தெரிந்தது.
தற்போதுள்ள பள்ளி மாணவர்களுக்கு தெரிவதில்லை. எனவே பெற்றோர் இதுபோன்ற இயற்கையான தின்பண்டங்களை வாங்கி கொடுத்தால் இதன் மகத்துவம் தெரியும் என்றார்.

