/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உற்ஸவ காலங்களில் சுவாமியை சுமக்கும் சீர்பாதம் துாக்கிகள் சேவையில் தன்னிறைவு
/
உற்ஸவ காலங்களில் சுவாமியை சுமக்கும் சீர்பாதம் துாக்கிகள் சேவையில் தன்னிறைவு
உற்ஸவ காலங்களில் சுவாமியை சுமக்கும் சீர்பாதம் துாக்கிகள் சேவையில் தன்னிறைவு
உற்ஸவ காலங்களில் சுவாமியை சுமக்கும் சீர்பாதம் துாக்கிகள் சேவையில் தன்னிறைவு
ADDED : மே 25, 2024 05:29 AM
திருப்புல்லாணி, : திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44-வதாக திகழ்கிறது. இங்கு பிரம்மோற்ஸவம், சைத்ரோத்ஸவம் என ஆண்டிற்கு இருமுறை விழா நடக்கிறது. அப்போது பெரிய தேரோட்டம் நடப்பது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய உற்ஸவ காலங்களில் காலை பல்லக்கு மற்றும் இரவில் நான்கு ரத வீதிகள் புறப்பாட்டிலும் சுவாமி வலம் வருகிறார். பெரிய சப்பரம் மற்றும் தேர்களில் வைப்பதற்கு மற்றும் பல்லக்கில் சுவாமி உள்பிரகார வீதி சுற்றுவதற்கு சீர்பாதம் துாக்கிகளின் பங்கு அளப்பரியதாகும்.
கோயில் சீர் பாத துாக்கிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் உற்ஸவ காலங்களில் கல்யாண ஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், பட்டாபிஷேக ராமர், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்லக்கு மற்றும் பல்வேறு அலங்கார வாகனங்களில் உற்ஸவ மூர்த்திகளை துாக்கி சுமக்கிறோம்.
இப்பணியில் 16 பேர் ஈடுபடுகிறோம். கோயிலில் நடக்கக்கூடிய விசேஷ வைபவங்கள் குறித்த விபரங்கள் முன்கூட்டியே எங்களுக்கு தெரிந்து விடும். அதனடிப்படையில் சுவாமி புறப்பாட்டிற்கு ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுவோம்.
உற்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள், மலர் மாலைகள் சாற்றப்பட்ட பின்பு 'யு' வடிவ தாங்கும் கட்டைகளை உடன் வைத்து செல்வோம். சுவாமி தரிசனத்திற்கு நிற்கும் போது எடையை தாங்குவதற்கு ஏற்றதாகும். நீண்ட உருளை வடிவ மூங்கில் கம்புகளை ஒரே சீராக துாக்கி செல்வோம்.
இறைவனை மனதில் நினைத்து 'கோவிந்தா' கோஷம் முழங்க துாக்கிச் செல்வது மனதிற்கும் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக எடை உள்ள வாகனங்களை துாக்கிச் செல்லும் போது கவனமாகவும் ஒருங்கிணைப்பு குழு செல்லும் போது இலகுவாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வழி கிடைக்கிறது.
உற்ஸவ மூர்த்திகள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சீர்பாத துாக்கிகளான எங்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. பல்வேறு வேலைகள் இருந்தாலும் உற்ஸவ காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் உற்சவமூர்த்திகளை துாக்கி செல்வதை கடமையாக கொண்டுள்ளோம். இது எங்களின் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம் என்றனர்.

