/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்* மொய் விருந்தில் பக்தர்கள் பங்கேற்பு
/
உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்* மொய் விருந்தில் பக்தர்கள் பங்கேற்பு
உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்* மொய் விருந்தில் பக்தர்கள் பங்கேற்பு
உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்* மொய் விருந்தில் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : செப் 05, 2024 07:48 PM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகருக்கு 2 தேவியருடன் திருக்கல்யாணம் நடந்தது. மொய் விருந்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உப்பூர் விநாயகர் கோயிலில் மூலவர் மீது பகல் முழுதும் சூரிய ஒளிபடும் வகையில் கருவறை அமையப்பெற்றுள்ளதால் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீதாபிராட்டியை மீட்க ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன் இந்த விநாயகரை வணங்கிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இங்கு சதுர்த்தி திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. ஆக., 29ல் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் எழுந்தருளினார். எட்டாம் நாளான நேற்று மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 2 தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடப்பதால் வெளி மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் வழங்கப்பட்டன. மொய் விருந்தில் பரிமாறப்பட்ட கொழுக்கட்டைகளை பக்தர்கள் பெற்று சென்றனர். தொடர்ந்து தேவியருடன் விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளினார்.