/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிக்கடி மின்தடையால் சுற்றுலா பயணிகள் அவதி
/
அடிக்கடி மின்தடையால் சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : மே 15, 2024 06:45 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் லாட்ஜ்களில் அறைகள் கொடுக்க மறுப்பதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால் தினமும் ஏராளமானோர் தங்கி ஓய்வெடுத்து செல்வார்கள்.
இச்சூழலில் கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் பகுதியில் பராமரிப்பு என்ற பெயரில் ஒரு வாரத்தில் 3 நாட்கள் மின்தடையும், பிற நாட்களில் தினமும் 4 முறை 30 நிமிடம் முதல் ஒரு மணி வரை மின்தடை ஏற்படுகிறது.
இதனால் தங்கும் விடுதிகளில் ஜெனரேட்டர்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் ஜெனரேட்டர்கள் தரத்திற்கு ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு 3 லி., முதல் 5 லி., டீசல் தேவைபடுவதால், ஒரு நாளில் 8 மணி நேர மின்தடைக்கு 24 லி., முதல் 40 லி., வரை பயன்படும் டீசலுக்காக விடுதி உரிமையாளர்களுக்கு ரூ. 2400 முதல் 4000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இதனால் சில விடுதி உரிமையாளர்கள், விடுமுறை நாளை தவிர பிற நாட்களில் குறைவாக சுற்றுலா பயணிகள் வருவதால் அறைகள் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை உள்ளது.

