/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் களை கட்டிய கிராமங்கள்
/
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் களை கட்டிய கிராமங்கள்
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் களை கட்டிய கிராமங்கள்
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம் களை கட்டிய கிராமங்கள்
ADDED : ஆக 15, 2024 04:18 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் ஆடி மாதம் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலமாக நடந்தது.
வண்ணாங்குண்டு தெற்கு மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு தீபாராதனை நடத்தி முளைப்பாரிகளுக்கு பூஜை நடந்தது.
வண்ணாங்குண்டு தெற்கு கிராம கமிட்டி தலைவர் ரத்தினம், கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாலையில் ஆயிரம் முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள் ஊருணியில் பாரிகளை கங்கை சேர்த்தனர்.
திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஆக.4ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செய்தனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி தெற்கு தெரு மக்கள் செய்திருந்தனர்.
திருப்புல்லாணி மேற்கு மொத்தி வலசையில் உள்ள காந்தாரி அம்மன் கோயில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. நேற்று காலை பால்குடம், காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேற்கு மொத்தி வலசை கிராம மக்கள் செய்திருந்தனர்.
நயினாமரைக்கான் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. அம்மன் கரகத்திற்கு முன்பு பாரி சுமந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. பாரி மாலையில் நையினாமரைக்கான் ஊருணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை யாதவ சமுதாய கிராம மக்கள் செய்திருந்தனர்.
உத்தரவை கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. சக்தி கரகம் முன்னே செல்ல முளைப்பாரி சுமந்து கிராம மக்கள் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து மாலையில் பாரியை ஊருணியில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை கிராம தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் சரவணன், செயலாளர் ஆனந்த், ஊராட்சித் தலைவர் கணேஷ் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
பத்திராதரவை முத்துமாரியம்மன் கோயில் மற்றும் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கிராம மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலிட்டனர். வளாகம் முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது.
*பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவையொட்டி கோயில் முன்பு மேடை அமைக்கப்பட்டு கோலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. நேற்று இரவு மூலவர் மற்றும் உற்ஸவர் மஞ்சள் காப்பு சாற்றி, மஞ்சள் பட்டுடுத்தி முளைப்பாரி ஏந்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம மக்கள் முளைப்பாரி விழாவை கொண்டாடினர். அப்போது பெண்கள், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். தொடர்ந்து நேற்று அனைத்து பகுதிகளிலும் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அப்போது பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றனர். மழை பெய்யும் என்ற மக்களின் நம்பிக்கை அடிப்படையில் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது.