ADDED : ஜூலை 30, 2024 10:56 PM
ராமநாதபுரம்:போக்சோ வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாத தஞ்சாவூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கந்தசாமிபுரம் பகுதியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை மாவட்டம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த முனியசாமி 25, அழைத்து சென்றார். சிறுமியின் தாய் புகாரில் முதுகுளத்துார் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை அதிகாரியான அப்போதைய முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் இளவரசு சாட்சியம் அளிக்க தொடர்ந்து ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளவரசுக்கு பிடி வாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இளவரசு தற்போது தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.