/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக்கிரமிப்பால் அழிந்த கிருதுமால் நதி மீட்கப்படுமா
/
ஆக்கிரமிப்பால் அழிந்த கிருதுமால் நதி மீட்கப்படுமா
ADDED : ஏப் 03, 2024 07:26 AM

ராமநாதபுரம்: ஆக்கிரமிப்புகளால் கழிவு நீர் கால்வாயாக மாறி அழிந்து வரும் கிருதுமால் நதியை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அருகே நாகமலையில் உள்ள புல்லுாத்து நாக தீர்த்தம், காக்கா ஊற்று உள்ளிட்ட ஐந்து இயற்கை ஊற்றுகளில் உருவாகும் நீரால் அடிவாரத்தில் இருந்து தோன்றியதே கிருதுமால் நதி.
நாகமலை அடிவாரத்தில் வைகைக்கு அருகே மாலை போன்ற தோற்றத்தைக் கொண்டு உருவாகிறது. கிருதுமால் நதி குறித்து பக்தி புராணங்களான ஸ்ரீமத் பாகவதம், நாராயணீயம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 17ம் நுாற்றாண்டுக்கும் முந்தைய காலத்து நதியாக கூறப்படும் கிருதுமால் நதி மக்களால் புனித நதியாகவும் வணங்கப்பட்டு வந்துள்ளது.
பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மன்னன் நீராடும் நதியாக கிருதுமால் நதி இருந்ததாகவும், நதியில் நீராடும் போது மன்னனுக்கு காட்சியளித்த மீன் உருவத்தைக் கொண்டே பாண்டிய நாட்டின் சின்னமாக மீனை அறிவித்ததாக செய்திகள் உள்ளன.
தோற்றம் மாறிய கிருதுமால் நதி
மதுரை நாகமலை அடிவாரத்தில் நிலையூர் கால்வாய் பகுதியில் தோன்றி துவரிமான், அச்சம்பத்து, விராட்டிப்பத்து, பொன்மேனி, எல்லீஸ் நகர், திடீர் நகர், மேலவாசல், கீரைத்துறை, சிந்தாமணி, சாமநத்தம் வழியாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் வழியாக 90 கி.மீ.,க்கும் மேல் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் மலட்டாறு என்ற பெயர் மாற்றம் அடைந்து கடலில் கலக்கிறது.
கிருதுமால் நதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 11 மாதங்கள் நீர்வரத்து இருந்துள்ளது. மதுரை நகரில் மட்டும் 15 கி.மீ., பயணிக்கும் கிருதுமால் நதி, தற்போது மதுரை நகரின் பிரதான கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. அண்மைக்காலத்தில் தோற்றம் மாறிய நதிகளில் மிக முக்கியமானது கிருதுமால் நதி தான்.
மதுரை நகரை வளப்படுத்தியதில் கிருதுமால் நதிக்கு முக்கிய பங்கு உண்டு. மதுரைக்கு பெருவெள்ளம் வந்தாலும் கூட நகருக்கு சிறிதும் பாதிப்பின்றி கிருதுமால் நதி வழியாக தண்ணீரை வெளியேற்றும் அமைப்பை பெற்றுள்ளது.
பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்
ராம.முருகன், மாநில செயலாளர், காவிரி- வைகை - கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம்: கிருதுமால் நதியால் நான்கு மாவட்டங்களில் 784 கண்மாய்களும், 37,559 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. வைகையின் நீர்வரத்தில் கிருதுமால் நதிக்கும் ஒதுக்கீடு உண்டு.
காலப்போக்கில் நகரமயமாதலால் கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்பால் நீர்வரத்து இல்லாததால் தனது வரலாற்று அடையாளத்தை இழந்துள்ளது. மதுரையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிருதுமால் நதியை மீட்டெடுக்க வேண்டும்.
முதலில் தற்போது வாய்க்காலாக சுருங்கிவிட்ட கிருதுமால் நதியை துார்வார வேண்டும். நதியில் உள்ள கழிவுகள், குப்பையை அகற்றி நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
பல இடங்களில் துார்ந்து போன கால்வாயை சீரமைக்க வேண்டும். கிருதுமால் நதிக்கு வைகையிலிருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க வேண்டும். மாடக்குளம் கண்மாய், துவரிமான் கண்மாய், அச்சம்பத்து கண்மாய் உபரி நீரை நதியில் விட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே கிருதுமால் நதியில் நீரோட்டம் ஏற்படும். இதன் மூலம் மதுரை நகரில் 18 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
வெள்ளக் காலங்களில் வெள்ளப் போக்கியாக செயல்படுவதோடு மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைகளையும் பாசனத்தையும் பூர்த்தி செய்ய முடியும்.
அழிவின் விளிம்பில் இருக்கும் கிருதுமால் நதியை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

