ADDED : நவ 10, 2024 11:12 PM
ராமேஸ்வரம் ; ராமேஸ்வரத்தில் இருந்து, 393 விசைப்படகுகளில் நவ., 9ல் சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லை அருகே மீன்பிடித்தனர். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர்.
அப்போது, கீதன், சகாயராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோரது படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால், அப்படகுகளை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.
படகுகளில் இருந்த, 27 முதல் 58 வயது வரையிலான, 23 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி நவ., 12ல் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை சிறைபிடித்த கீதன் படகு, ராமேஸ்வரம் மீன்துறை அனுமதி இன்றி மீன்பிடிக்க சென்ற பைபர் கிளாஸ் படகாகும். இப்படகிற்கு, மீன்துறை பதிவு எண் இல்லை.
இதனால், மீன்பிடிக்க அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை.