/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூக்கையூர் கடல் அலையில் சிக்கிய 4 மாணவிகள் மீட்பு
/
மூக்கையூர் கடல் அலையில் சிக்கிய 4 மாணவிகள் மீட்பு
ADDED : ஜன 17, 2025 12:41 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரில் மன்னார் வளைகுடா கடல் அலையில் சிக்கிய மதுரை பிளஸ் 2 மாணவி உட்பட 4 மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பிச்சை மூப்பன்வலசை, மூக்கையூர், அரியமான் உள்ளிட்ட கடற்கரை சுற்றுலா இடங்களை பார்வையிட ஏராளமானோர் வருகின்றனர்.
நேற்று கமுதி பகுதியை சேர்ந்த தோழிகளாக 3 மாணவிகளுடன் மதுரையில் பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மாணவியும் மூக்கையூர் கடற்கரைக்கு உறவினர்களுடன் வந்தனர்.
காலை 10:30மணிக்கு கடல் அலையை வேடிக்கை பார்த்த போது எதிர்பாராமல் பெரிய அலையில் சிக்கி நீரில் மூழ்கினர். உறவினர்கள் மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்சில் அனுப்பினர். ஒரு மாணவி கடலாடி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
மூழ்கியதில் கடல்நீரை அதிகளவில் குடித்துள்ளனர். மற்றபடி உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் கூறினர். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தனுஷ்கோடி, மூக்கையூர் கடற்கரையில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்து விபரம் தெரியாமல் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் கடல் அலையில் விளையாடுவது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.