/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே மழையால் 5 டன் தக்காளி பாதிப்பு
/
கமுதி அருகே மழையால் 5 டன் தக்காளி பாதிப்பு
ADDED : டிச 27, 2024 04:48 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் தொடர் மழையால் செடிகளில் தக்காளி அழுகியதால் 5 டன்னுக்கு மேல் வீணாகியது.
கமுதி தாலுகாவில் நெல், மிளகாய், வாழை மற்றும் சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். கோரைப்பள்ளம், கீழராமநதி, கே.எம்.கோட்டை, கிளாமரம் உள்ளிட்ட பல கிராமங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி விவசாயம் செய்கின்றனர்.
இப்பகுதியில் தக்காளி செடிகளில் காய்க்கத் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நன்கு காய்த்து வந்த தக்காளி செடியிலே அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோரைப்பள்ளம் இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது:
கோரைப்பள்ளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக இயற்கை முறையில் தக்காளி விவசாயம் செய்கின்றனர். தினந்தோறும் தக்காளி அறுவடை செய்து வந்த நிலையில் தற்போது மழையால் அழுகி செடியிலேயே வீணாகியது.
இந்த ஆண்டு 10 டன்னுக்கு மேல் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தற்போது 5 டன்னுக்கும் அதிகமான தக்காளி மழையால் வீணாகியுள்ளது. இதனால் தக்காளி விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.