/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி படேல் தெருவில் 60 ஆண்டு தண்ணீர் தொட்டி
/
பரமக்குடி படேல் தெருவில் 60 ஆண்டு தண்ணீர் தொட்டி
ADDED : பிப் 15, 2024 05:07 AM

அச்சத்தில் அக்கம் பக்கத்தினர் அலறல்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி படேல் தெருவில் 60 ஆண்டுகள் கடந்த மேல்நிலை குடிநீர் தொட்டியால் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 11 வது வார்டு படேல் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.
இதிலிருந்து கவுரி அம்மன் கோயில் தெரு, கன்னி சுந்தரராஜன் தெரு, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, வன்னி மரத்தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, படேல் தெரு, சின்ன கடை வீதிகளில் நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது மேல்நிலைத் தொட்டியை சுற்றி தொட்டிக்கு மேல் உயரங்களில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது தொட்டியின் பில்லர்கள் சேதமடைந்து சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அருகிலுள்ள வீடுகளின் மீது தொட்டி சாய்வதால் கட்டடங்கள் சேதமடைந்து வருவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காவிரி குடிநீர் ஏற்றும் நேரங்களில் கொள்ளளவை மீறி தண்ணீர் ஏற்றப்படுவதால் தினந்தோறும் காலை நேரங்களில் தண்ணீர் அருவி போல் கொட்டி வீணாகிறது.
இதனால் ஒட்டுமொத்தமாக சேதமடைந்து வரும் தொட்டி அமைந்துள்ள தெருவில் வசிப்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ஆகவே தொட்டியை உடனடியாக சீரமைப்பதோடு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

