/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தென்னை மரத்திற்கு ஊடுபயிராக மருத்துவ குணம் வாய்ந்த நோனி பழங்கள்; சாகுபடி செய்யும் விவசாயி திருப்புல்லாணி அருகே தென்னந்தோப்பில் வளர்க்கப்படுகிறது
/
தென்னை மரத்திற்கு ஊடுபயிராக மருத்துவ குணம் வாய்ந்த நோனி பழங்கள்; சாகுபடி செய்யும் விவசாயி திருப்புல்லாணி அருகே தென்னந்தோப்பில் வளர்க்கப்படுகிறது
தென்னை மரத்திற்கு ஊடுபயிராக மருத்துவ குணம் வாய்ந்த நோனி பழங்கள்; சாகுபடி செய்யும் விவசாயி திருப்புல்லாணி அருகே தென்னந்தோப்பில் வளர்க்கப்படுகிறது
தென்னை மரத்திற்கு ஊடுபயிராக மருத்துவ குணம் வாய்ந்த நோனி பழங்கள்; சாகுபடி செய்யும் விவசாயி திருப்புல்லாணி அருகே தென்னந்தோப்பில் வளர்க்கப்படுகிறது
ADDED : நவ 02, 2025 04:07 AM

திருப்புல்லாணி: மருத்துவ குணம் நிறைந்த நோனி பழங்களை திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் உள்ள தென்னந்தோப்பில் ஊடுபயிராக விவசாயி ஒருவர் வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சேர்ந்தது வெண் நுணா எனப்படும் நோனி மரமாகும்.
ஆஸ்திரேலியா, மொரிசியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளில் இதற்கு அதிக கிராக்கி நிலவுகிறது.
இந்நிலையில் கடற்கரையோர பகுதியை ஒட்டி பஞ்சந்தாங்கி அருகே உள்ள தென்னந்தோப்பு பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த நோனி பழங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளைவித்து வருகிறார் விவசாயி சந்தவழியான் 72.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நோனியை மறு அறிமுகம் செய்த போது மஞ்சனத்தி மர வகையைச் சார்ந்த வெண் நுணா நோனியின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டானது.
அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் மூலம் நோனி பழக்கன்றுகளை இறக்குமதி செய்து திருப்புல்லாணியில் உள்ள தென்னந்தோப்பில் 4 ஏக்கரில் அவற்றை தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வளர்த்து வருகிறேன்.
நடவு செய்த ஒரே ஆண்டில் நோனி காய்ப்புக்கு வந்து விடும். நான்கு ஆண்டு வயது கொண்ட ஒரு மரத்தில் 40 கிலோ முதல் 80 கிலோ வரையிலும் ஆண்டுக்கு 11 மாதங்கள் விளைச்சல் எடுக்கலாம்.
இதில் சுமார் 10 லி., வரையிலும் நோனி ஜூஸ் எடுக்கலாம். ஒரு மரம் அதிகபட்சம் 15 ஆண்டுகளுக்கும் மேல் பலன் தரக்கூடியதாகும்.
சேகரிக்கப்பட்ட பழங்களை இருட்டு அறையில் 22 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும். பின்னர் கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து மூன்று முறை வடிகட்ட வேண்டும்.
களி மாதிரி வரும். இதனுடன் 14 நாட்களுக்குப் பிறகு நெல்லிக்காய் பொடி சேர்த்தால் திரவ வடிவத்திற்கு மாறிவிடும். அதை ஜூஸாக எடுத்து டானிக் தயாரிக்கலாம். வைட்டமின் ஏ, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன.
தற்போது மெடிக்கல் ஷாப்புகளில் நோனி ஜூஸ் ஒரு லி., ரூ.1500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
அனைத்திற்கும் எதிர் மருந்தாகவும் நல்ல மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது. இது சிறந்த பணப்பயிராகும். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் இதுபோன்ற நோனி மரங்களை பயிரிட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த உரிய ஆலோசனைகளை தென்னை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன். தென்னை மரத்தின் ஊடுபயிராக நோனி மரத்தை நட்டு பராமரிக்கும் போது அவற்றின் வேர் தென்னை மரத்தின் வேர்களுடன் ஊடாகச் சென்று மரம் காயப்புக்கு நல்ல உறுதுணையாக அமைகிறது.
இதற்கு பஞ்சகவியம், இயற்கை உரங்கள் மட்டுமே தேவை. இப்பழத்தை முகர்ந்து பார்த்தால் துத்தநாகம் போன்று ஒருவித ரசாயன வாசனை இருக்கும்.
இதன் மகத்துவம் தெரியாததால் விவசாயிகள் விளைவிக்க முன்வரவில்லை. திராட்சை, ஏலக்காய், தேயிலை, காபி போன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற பணப்பயிர் நோனி பழம் சாகுபடி தான் என்றார்.

