/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொக்கி போட்டு மின்சாரம் திருடுவோர் மீது நடவடிக்கை
/
கொக்கி போட்டு மின்சாரம் திருடுவோர் மீது நடவடிக்கை
ADDED : ஜன 29, 2025 06:41 AM
சாயல்குடி : சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் கோயில் விழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் பல்வேறு விதமான பொதுக்கூட்டங்களில் கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜெனரேட்டர் மூலம் மின் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சட்ட விரோதமாக ஒரு சில ஒலி ஒளி அமைப்பாளர்கள் விழா நடைபெறும் இடத்தில் உள்ள உயரழுத்த மின் ஒயரில் இருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கொக்கி போன்ற அமைப்பை பயன்படுத்தி மின் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது: பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் சட்ட விரோதமாக மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயரழுத்த மின்கம்பியில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதால் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற இதுபோன்ற முறையால் அதிக அளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுபோன்று கொக்கி போட்டு மின்சாரம் திருடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தனி குழுவை அமர்த்த வேண்டும்.
இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு குறைவதோடு சட்டவிரோத மின் திருடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்றனர்.

