/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு அட்வைஸ் * நிலக்கடலையில் பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க..* கடலாடியில் வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு
/
விவசாயிகளுக்கு அட்வைஸ் * நிலக்கடலையில் பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க..* கடலாடியில் வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு
விவசாயிகளுக்கு அட்வைஸ் * நிலக்கடலையில் பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க..* கடலாடியில் வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு
விவசாயிகளுக்கு அட்வைஸ் * நிலக்கடலையில் பூச்சி, நோய் தாக்குதலை தடுக்க..* கடலாடியில் வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு
ADDED : டிச 14, 2024 05:49 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் பூக்கும், காய்பிடிக்கும் பருவத்தில் வேர் அழுகல் மற்றும் சிவப்பு கம்பளி புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரி பயிராக கடலாடி, கமுதி மற்றும் நயினார்கோவில் வட்டாரங்களில் ஐப்பசி, கார்த்திகையில் சாகுபடி செய்யப்படுகிறது. கடலாடி தாலுகாவில் ஐப்பசி பட்டத்தில் 280 எக்டேரில் பூப்பாண்டியபுரம், கடுகுசந்தை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது நிலக்கடலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளது. இப்பருவத்தில் வேர் அழுகல் மற்றும் சிவப்பு கம்பளி புழு தாக்குதல் நிலக்கடலையில் பரவலாக தென்படுகிறது. இது தொடர்பான புகாரில் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், பூச்சியியல் வல்லுநர் ராம்குமார் மற்றும் கடலாடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மனோகரன், ஆராய்ச்சி மாணவர்கள் அடங்கிய குழு நிலக்கடலை வயல்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வேர் அழுகல், சிவப்பு கம்பளி புழு தாக்குவதற்கான காரணங்கள், தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து பூச்சியியல் வல்லுநர் ராம்குமார் கூறியதாவது:
வேர் அழுகல் நோய் மேக்ரோபோமினா என்ற ஒரு வகை பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோய் விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை தாக்குதல்களை ஏற்படுத்தும். இதற்கான நோய் கிருமிகள் மண்ணிலிருந்து பரவுகிறது. வறண்ட வெப்ப நிலைக்குப் பிறகு மழை பெய்தால் மண்ணில் அதிகப்படியான ஈரம் அல்லது தண்ணீர் காரணமாக இந்த நோய் தாக்குதல் அதிகமாகும்.
நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். இதனால் செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த தரமான விதைகளை உபயோகிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 'டிரைக்கோடெர்மா விரிடி' எனும் எதிர் உயிரி பூஞ்சாணம் 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இயற்கை உரங்களான சாண எரு, வேப்பம் புண்ணாக்கு, பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரங்களை இட வேண்டும். விதைத்த 20 முதல் 30 நாட்களுக்குள் டிரைக்கோடெர்மா 1 கிலோ பவுடரை 50 கிலோ சாண எருவுடன் கலந்து இடவேண்டும். நோய் தாக்கிய செடிகளைச் சுற்றி கார்பெண்டசிம் 0.1 சதவீதம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம்) எனும் பூஞ்சாணக் கொல்லி மருந்துக் கரைசலை ஊற்ற வேண்டும்.
மேலும் சிவப்பு கம்பளி புழுக்கள் நிலக்கடலை பயிரை தாக்கி அதிகம் சேதப்படுத்துகிறது. செடியில் அனைத்து இலைகளையும் தின்று அதன் நரம்பு பகுதியை மட்டும் விட்டு வைக்கும். இதை கட்டுப்படுத்த கோடை உழவு செய்து, சிவப்பு கம்பளி புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
விளக்கு பொறியை எக்டேருக்கு ஒன்று என்ற அளவில் வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். குயினால் பாஸ் 25 ஈசி மருந்தை ஏக்கருக்கு 500 மில்லி வீதம் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம் என்றார்.
-