/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாளியரேந்தலில் மழை நீரில் மூழ்கி 150 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
/
தாளியரேந்தலில் மழை நீரில் மூழ்கி 150 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
தாளியரேந்தலில் மழை நீரில் மூழ்கி 150 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
தாளியரேந்தலில் மழை நீரில் மூழ்கி 150 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
ADDED : அக் 23, 2025 04:56 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தாளியரேந்தல் கண்மாய் பணிகள் முடிவு பெறாததால் பெய்த மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் மடையில் இருந்து தண்ணீர் வெளியேறி 150 ஏக்கருக்கும் அதிகமாக பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது.
முதுகுளத்துார் அருகே தாளியரேந்தல் கிராமத்தில் நெல், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் 400 ஏக்கருக்கு அதிகமாக விவசாயம் செய்து வருகின்றனர். கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு மடைகளுடன் கூடிய கண்மாய் மராமத்து பணி நடைபெற்று வந்தது. முதுகுளத்துார் பகுதியில் பெய்து வரும் மழையால் கண்மாய் மராமத்து பணி முடிவு பெறாததால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் முழுவதும் வெளியேறி வயலில் தேங்கியுள்ளது.
தமிழ்நாடு வைகை பாசன விவசாய சங்கத்தின் நிறுவன தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
தாளியரேந்தல் கிராமத்தில் கண்மாய் மராமத்து பணி ரூ.67 லட்சத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மடையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் நடைபெற்ற பணியில் பலகை அடித்து செல்லப்பட்டு வயல்களில் முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் 150 ஏக்கருக்கும் அதிகமான மிளகாய், நெற்பயிர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிகள் முடிவு பெறாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்மாய் மராமத்து பணி முழுமையாக நிறைவு பெற்றவுடன் அதற்கான தொகையை வழங்க வேண்டும். இதே போன்று பணிகள் பருவ மழைக்காலம் துவங்குவதற்கு முன் கண்மாய், ஊருணிகள் மராமத்து பணி நடைபெற்று முடிந்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்கவும், ஒப்பந்ததாரரின் பணிகளை முழுமையாக நிறைவு செய்த பின் அதன் தொகையை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அதிக மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை காப்பீட்டு தொகையும், நிவாரணத்தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
எனவே இந்த சூழ்நிலையில் தற்போது விவசாயம் துவங்கிய நிலையிலேயே தண்ணீரால் மூழ்கியது. உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.