/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்னொளியில் ஜொலித்த கலங்கரை விளக்கம்
/
மின்னொளியில் ஜொலித்த கலங்கரை விளக்கம்
ADDED : அக் 23, 2024 04:37 AM

கீழக்கரை : கலங்கரை விளக்க தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலித்தது.
மத்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு முதல் அக்.20ல் இந்திய கலங்கரை விளக்கத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை மற்றும் கோவாவில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு இரண்டாவது இந்திய கலங்கரை விளக்க திருவிழா ஒடிசா மாநிலம் பூரியில் கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதனால் இரவு நேரத்தில் கலங்கரை விளக்கம் முழுவதும் மின்னொளியால் ஜொலித்தது. மேலும் பூரியில் நடந்த விழாவை காணொளி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து அப்பகுதி மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கீழக்கரை கலங்கரை விளக்க நிலைய பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கடல் மட்டத்திலிருந்து 35 மீ., உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மேல் பகுதிக்குச் செல்ல 136 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 3:00 முதல் 6:00 மணி வரையிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.
உள்ளூர் பயணிகளுக்கு ரூ.10, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 25, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.