ADDED : செப் 18, 2026 04:42 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரியனேந்தல் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நென்மேனி ஊராட்சி ஆவரேந்தல் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கர்கள் மோகன், குமரேசன், விக்னேஷ், கோபிநாத் , கால்நடை ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் மேற்கொள்ளப்பட்டது. மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகளின் நோய் தடுப்பு, சுகாதார பராமரிப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கால்நடைகள், கோழி வளர்ப்போர் பலர் பங்கேற்றனர்.––––
