ADDED : செப் 18, 2026 04:42 PM
கமுதி: கமுதி அருகே செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் விழாவில் நுாதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் வைக்கோல் வைத்து சாக்கு வேடம் அணிந்து வந்தனர்.
கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, சேத்தாண்டி வேடத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அழகு வள்ளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் உடலில் வைக்கோல் வைத்து சாக்கு வேடம் அணிந்து நுாதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தண்ணீரில் கரைத்தனர்.
விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செங்கப்படை கிராம மக்கள் செய்தனர்.
––
