/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு
/
உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு
உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு
உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு
ADDED : ஏப் 17, 2025 02:56 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்படாததால் தவிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் சித்த மருத்துவப்பிரிவில் 863 பேர் உதவி சித்த மருத்துவ அலுவலர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுடன் ஆயுர்வேதத்தில் 79 பேரும், யுனானி பிரிவில் 40 பேரும், ஓமியோபதியில் 61 பேரும், நேச்சரோபதி, யோகாவில் 157 பேரும் டாக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் உதவி மருத்துவ அலுவலர் என்ற பணி நிலையில் ஓய்வு பெறும் வரை பணிபுரிகின்றனர்.
ஆங்கில மருத்துவத்தில் பணியில் சேரும் போது உதவி அறுவை சிகிச்சை மருத்துவராகவும், 15 ஆண்டுகளில் சிவில் சர்ஜன், 17 ஆண்டுகளில் சீனியர் சிவில் சர்ஜன், 20 ஆண்டுகளில் தலைமை சிவில் சர்ஜன் ஆக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வுக்கேற்ப சம்பளமும் உயர்த்தி வழங்கப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் பணியில் சேரும் போது இருக்கும் நிலையில் தான் உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் ஓய்வு பெறுகின்றனர். 2022ல் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் அரசு செயல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டதையடுத்து இந்திய மருத்துவ ஆணையரகம் உதவி சித்த மருத்துவர்களுக்கு மருத்துவ அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
நிதித்துறை சிறப்பு செயலாளர் அருண்சுந்தர் தயாளன் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியும் இத்துறையின் செலவின செயலாளர் ஒப்புதல் வழங்காததால் பதவி உயர்வு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பதவி உயர்வு கிடைக்காமல் சித்த மருத்துவ அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.