ADDED : செப் 25, 2024 03:33 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் சனவேலி கிராமத்தில் மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்தும், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை குறித்தும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் மண் பரிசோதனை செய்யப்பட்டது. மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுவது குறித்தும் உவர் நில சீர்திருத்தம் பற்றியும், மண் வளத்தை பாதுகாக்க இயற்கை மற்றும் அங்கக உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயிகளுக்கு உயிர் நுண்ணுாட்ட உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டன. வேளாண் அலுவலர் சுப்ரியா, உதவி அலுவலர் லாவண்யா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.