/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
779 டன் விதைகளை விற்க தடை: துணை இயக்குனர்
/
779 டன் விதைகளை விற்க தடை: துணை இயக்குனர்
ADDED : மே 28, 2025 11:11 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது மற்றும் தரக்குறைவு காரணமாக 3 கோடியே 56 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 779.21 டன் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்ஷா கூறியதாவது:
தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீதம் மகசூலை அதிகரிக்க முடியும். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை கட்டுப்பாட்டில் ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் செயல்படுகிறது.
தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்க உற்பத்தியாளர், விநியோகஸ்தர், விற்பனையாளர் ஆகிய மூன்று நிலைகளிலும் விதைகள் சேகரித்து பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி விதையின் தரம் உறுதி செய்த பிறகே விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது.
விதை விற்பனை உரிமம் வழங்குதல், தரமான விதைகள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதை உறுதி செய்து விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகிய சட்டங்கள் இத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
விதை ஆய்வு பிரிவின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5566 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு 2775 நிலையத்தில் ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் 2098 நிலையங்களில் பணி விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது மற்றும் தரக்குறைவிற்காக விற்பனை செய்திட தடை விதிக்கப்பட்டு ரூ. 3 கோடியே 56 லட்சத்து 51 ஆயிரம் லட்சம் மதிப்பிலான 779.21 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முளைப்புத்திறன் குறைபாடு காரணமாக 4 விதை விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் 72 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகளை பெற்று பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
ராமநாதபுரம் விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலா உடன் இருந்தார்.