/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மக்கள் தவிப்பு; கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
/
செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மக்கள் தவிப்பு; கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மக்கள் தவிப்பு; கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மக்கள் தவிப்பு; கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஆக 25, 2025 02:51 AM

திருவாடானை : மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் பெயரளவில் உள்ளன. குறிப்பாக திருவாடானை தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படவில்லை. 30 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் குடம் ரூ.12க்கு குடிநீரை விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
திருவாடானை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. இதில் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட சில கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கபட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படாததால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
திருவாடானையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மின்தடை ஏற்படும் நேரங்களில் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் நீரேற்று நிலையங்கள் அருகில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. குஞ்சங்குளம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைக்கப்பட்ட இந்த ஜெனரேட்டர்கள் செயல்படாமல் போனதால் துருப்பிடித்து வீணாகிறது.
அதே போல் குஞ்சங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் சுப்பிரமணியபுரம் அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, திருவாடானை மங்களநாதன் குளம், கல்லுார் அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் உள்ளது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதே போல் பல்வேறு கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படவில்லை.
இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் கிராமத்தில் செயல்பட்ட குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது ராமநாதபுரம் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மேற்பார்வையில் இப்பகுதி உள்ளது. ஆங்காங்கே ஆழ்துளை கிணறுக்காக அமைக்கப்பட்ட கருவிகள் திருடு போகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே ஆழ்துளை கிணறுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், திருவாடானை தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு தொய்வு இன்றி குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--