/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலை ஓசை இல்லாத அழகிய அரியமான் 'பீச்': ராமநாதபுரத்தில் ஒரு மெரினா
/
அலை ஓசை இல்லாத அழகிய அரியமான் 'பீச்': ராமநாதபுரத்தில் ஒரு மெரினா
அலை ஓசை இல்லாத அழகிய அரியமான் 'பீச்': ராமநாதபுரத்தில் ஒரு மெரினா
அலை ஓசை இல்லாத அழகிய அரியமான் 'பீச்': ராமநாதபுரத்தில் ஒரு மெரினா
ADDED : நவ 01, 2024 04:05 AM

ராமநாதபுரம் : சென்னை 'மெரினா பீச்' போல ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே மணல் பாங்கான இடத்தில் அலை ஓசையே இல்லாத அழகிய அரியமான் 'பீச்' அமைந்துள்ளது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மின்னும் மணற்பரப்பு, சுற்றிலும் சவுக்கு மரங்கள் சூழ இயற்கையான சூழ்நிலையால் சிறந்த பொழுது போக்கும் மையமாக அரியமான் 'பீச்' அமைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியானது ராமநாதபுரத்தில் துவங்கி துாத்துக்குடி வழியாக கன்னியாகுமாரி வரை 10,500 சதுர கி.மீ.,ல் 225 மீனவர் கிராமங்களை உள்ளடக்கியது.
இந்த வளைகுடா பகுதிகளில் வான்தீவு, குருசடை தீவு, காசுவார் தீவு, நல்ல தண்ணீர் தீவு, உப்புத்தண்ணீர் தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன.
கடல்சார் உயிரியல் பூங்கா
உலகின் வளம் மிக்க கடல் பகுதிகளில் மன்னார்வளைகுடா முக்கியமானது. அதனால் தான் யுனெஸ்கோ அமைப்பு இதைக் கடல்சார் பூங்காவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
அதன் விளைவாக இந்திய அரசு 1989ல் துாத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான560 சதுர கி.மீ., மன்னார் வளைகுடா பரப்பை, 'தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா' என்று அறிவித்தது.
குறிப்பாக ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல், தனுஷ்கோடி, குருசடை தீவு, பிச்சை மூப்பன் வலசு, காரங்காடு என கடலோரப்பகுதிகள் சிறந்த சுற்றுலா மையமாக உள்ளன. இவ்விடங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில, நாட்டினர் வந்து செல்கின்றனர்.
அலை இல்லாதஅரியமான் பீச்
வெளியூர் பயணிகளால் அதிகம் அறியப்படாத அழகிய பகுதியாக இங்கு உள்ள அரியமான் கடற்கரை உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 27 கி.மீ.,ல் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 2 கி.மீ., நீளத்தில் 150 மீட்டர் அகலத்தில் மணற்பாங்கான கடற்கரை அமைந்துள்ளது.
ஓசையில்லாத நீலக்கடலும், சிலிக்கான் சேண்ட் எனப்படும் மின்னும் வெண்மையான மணலும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இங்கு அரிய வகை ஜெல்லி மீன்கள் கடற்கரையில் ஒதுங்குகின்றன. அவை மீன் குஞ்சுகளை பிடித்து உண்ணுகின்றன. தொட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என்பதால் ஜெல்லி மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டு விடுகின்றனர். இது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
இயற்கை அழகு
இங்குள்ள கடலில் அலையின்றி அமைதியாகவும், கரையோர சவுக்கு மரங்களால் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. 50 அடி துாரம் வரை ஆழம் இருக்காது. படகு சவாரியும் உள்ளது. இதனால் மக்கள் பொழுது போக்க குவிகின்றனர்.
ராமநாதபுரம்- -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. கடற்கரையில் அவ்வப்போது கைப்பந்து, கால்பந்துபோட்டிகளும் நடக்கின்றன. உச்சிபுளி, பிரப்பன் வலசையிலிருந்து கூடுதலாக பஸ் வசதி செய்து தர வேண்டும்.
மெரினா போல மாற்றுங்க
அரியமான் கடற்கரை அருகே தனியார் ரெஸ்டாரன்ட் வைத்துஉள்ளனர். அது போல அழகிய சவுக்கு மரங்கள் பின்னணியில் பயணிகள் வந்து அமர்வதற்கு இருக்கைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்களுடன் பூங்கா அமைக்க வேண்டும்.
வனத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி சென்னை மெரினா கடற்கரையைப் போல அரியமான் கடற்கரையும் மாற்ற வேண்டும். அதற்கு தமிழகஅரசு உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.