UPDATED : அக் 19, 2026 04:17 PM
ADDED : அக் 19, 2026 04:15 PM
திருவாடானை: கோயில்களில் ஒலிக்கப்படும் மணி ஓசையில் நேர வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவுகிறது.திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் நேரம் அறிவதற்காகவும், வழிபாட்டு முறைகளின் ஒரு பகுதியாகவும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை கோயில் மணிகள் ஒலிக்கபடுவது வழக்கம். மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை திட்டமிட இந்த மணி ஓசையை நம்பியுள்ளனர். ஆனால் சில கோயில்களில் சீரான நேர கணக்கீடு இன்றி ஒலிக்கப்படுகிறது.
சரியான நேரத்திற்கு 10 அல்லது 15 நிமிடங்கள் முன்பாகவும், அல்லது தாமதமாகவும் ஒலிக்கப்படுகின்றன. ஒரு கோயிலின் மணி ஓசைக்கும், மற்றொரு கோயில் மணி ஓசைக்கும் இடையே நேர வேறுபாடு ஏற்பட்டு குழப்பம் நிலவுகிறது. இதனால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை உரிய நேரத்தில் செய்ய தவறி விடுகின்றனர்.
இது குறித்து மக்கள் கூறுகையில், குறிப்பிட்ட கால இடைவெளியை முறையாக துல்லியமாக அமைப்பதில் மணி தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தவில்லை. நல்ல தரமான மணி கருவிகளை பொருத்த வேண்டும். உயர் தர கருவிகளை பயன்படுத்தி நேர துல்லியத்தை உறுதி செய்தால் மட்டுமே மக்களின் குழப்பத்தை போக்க முடியும் என்றனர்.
